Saturday, November 21, 2009

உடற் கூற்றியல் காதல்




பட்டாம் பூச்சிகள்
சிற(கிறங்)கடித்து
பறக்கின்றன
வயிற்றினுள்ளே....

பூக்கள் ம(ன)ணம்
கவிழ்ந்து
மலர்கின்றன
நுரையீரல்களிலே...

நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்து
நாடி நரம்பதிரப்
பாய்கின்றன
குருதியாய்....

பளிச்சிட்டு
மின்னும் ஒரு
வெளிச்சம்
கண்களிலே...

யாருக்கும் கேட்காத
எங்கும் ஜனனிக்காத
நாத வெள்ளம்
செவிகளிலே...

பேசியல், பவுண்டேசன், கிறீம், பௌடர்
கொடுக்க மறந்த
பிரகாசமும் பழபழப்பும்.
தானாகவே தழுவிக் கொண்ட
முகம்....




தேன் கவிழ்ததோ
பாகு பரவியதோ என
இனிமை சுரக்கும்
குரல்...

புதிதாய் ஒரு
சுவாசம் -உனது
மூச்சு.

கணனி, கடுதாசி,
கை லேஞ்சி
புத்தகம், மேசை விரிப்பு
வெற்றுச் சுவரென,
சளராது உன் பெயர் பொறித்து
வரண்டு பேனா ஒழிந்த போதும்
சோராது எழுதத் துடிக்கும்;
கைகள்....

உன் செல்லப் பெயரைத் தவிர
வேறெதையும்
சுவைக்கவும் முணுமுணுக்கவும்
வளைந்து கொடுக்காத
நா.....

கோடானுகோடி நரம்பணுக்கள்
சிலிர்த்தெழுந்து
ஆர்ப்பரித்து
செயலுற்ற போதும்,
உன் நினைவன்றி
வேறெதையும்
தேக்க மறுக்கும்
மூளை.



உன் துடிப்பைத்
தன் துடிப்பாக
மயங்கி மகிழும்
இதயம்...

எல்லாமே
இப்பொழுது
என்னுள்ளே...
பரிணமித்த மாற்றங்கள்...
இல்லை மாயங்களா?

உடற் கூற்றியலில் இல்லாத
அதிசயம்
உன்னாக நான் மாறிய
உணர்வு அது!
காதல்....

-----எழில்.

2 comments:

  1. i am sure only those who have love feeling can write these kind of poems lol r u in love with..................any 1 lol hehe

    ReplyDelete
  2. கிரிஸ் உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் நினைப்பது போல் காதல் உணர்வு எல்லாம் இல்லை. எனது கவிதைகள் எல்லாம் கற்பனையே.

    ReplyDelete