Saturday, December 5, 2009

வேலைக்காரி


வேலைக்கு தாமதமாகி விடுமோ..
நினைப்பே துயிலெழுப்ப
அதிகாலையில்
கிளம்பி விட்டாள்
பணிமனைக்கு ....

வாசலில் கிடந்த பால்
பையையும், பேப்பரையும்
ஒருங்கெடுத்து
விரைகிறாள் வேலைத்தளத்திற்கு
காத்திருக்கிறது
சமையலறை.

பால் காய்ச்சி, தேநீர் இட்டு,
உணவு தயாரித்து,
குளிப்பாட்டி, அலங்கரித்து
உணவு தந்து
புத்தக பை அடுக்கி
கிளம்பி விட்டாள் பள்ளிக்கு,
குழந்தைகளோடு..

பேரம் பேசி காய்கறி வாங்கி,
வீடு திரும்ப
வேலைக்கு கிளம்ப எஜமான் தயாராகிறார்.
அவருக்கும் பணிவிடை....
முடிய
வீட்டைச் சுத்தம் செய்தல், காய்கறி நறுக்கல்
மதிய உணவு தயாரிப்பு
இன்னும் ஏதேதோ
காத்திருக்கிறது.

மூச்சுவிட நேரமில்லை!

குழந்தைகளை கூட்டி வந்தால்
வீட்டில் உள்ள எல்லோருக்கும்
மதிய உணவு பரிமாறல் காத்திருக்கிறது.
மாலை ரியூசன்
வீதி அளக்க வைக்கிறது.
அசர நேரமில்லை
இரவு உணவு செய்ய வேண்டுமே.

படித்துக் களைத்து
விளையாடி மகிழ்ந்த
குழந்தைகளுக்கு
முகம் கை கால் கழுவி,
பிஸ்கட்டும் பாலும் தந்து
பாடம் சொல்லி கொடுக்க
குருவி கூவுகிறது.
காலைக் குருவியல்ல
மணிக்கூட்டில் இருந்து,
8 மணியாம்
அவர்களுக்குப் பசிக்கும் நேரம்.

வீடு திரும்பிய நேரம் முதல்
கணனிமுன் தவமியற்றும்
குழந்தைகளின் தந்தைக்கும்
குழந்தைகளுக்கும்
இரவு உணவு தந்து
எல்லோரும் டிவி பார்க்கையில்
தானும் உண்ணுகிறாள்
தனியாக.

எல்லோரையும் தூங்க வைத்து
சமையலறை சுத்தம் செய்து
பின் கிளம்பி விட்டாள்.
அவளும்
படுக்கைக்கு

நன்றியும் பகிரப்படாத பணி்!
ஆனாலும் மகிழ்வுடன் தூங்குகிறாள்
களைப்புத் தாலாட்ட
அந்த இல்லத்தின் அரசியாம்!
தேவி.

காத்திருக்கிறாள்
குயிலின் ஓசைக்கு!
காலையில் துயிலெழும்ப…

-----எழில்.

2 comments:

  1. ரொம்ப நல்ல இருக்குங்க...

    ReplyDelete
  2. ஊதியம் இன்றி நாள் முழுவதும் பணியாற்றும் இல்லத்தரசியை 'நன்றியும் பகிரப்படாத பணி ' என அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    விழ வேண்டியவர்களின் காதில் விழுந்தால் நல்லது.

    ReplyDelete